Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, August 4, 2020

மனசெனும் மாய(யா) விசை - 2

                                 


வானின் பெருவெளியெங்கும் அலைந்து திரிகிறது விசும்பு, மனம் போலவே...
அலைந்து  அலைந்து ஆழியின் உட்செல்கிறது மனம் போலவே....ஆலி
பிரவாகம் என பொங்கி படர்கிறது  மனமெலாம்....

ஜான்சியின் பூங்காக்களில் சின்னஞ் சிறுமியர் உதட்டு சாயத்துடன் கண்டிப்பாக நண்பர் அல்லது  கணவர் குழந்தையுடன் பார்க்க முடிந்தது..கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர முடிந்தது...

ஜான்சி ராணியின் கோட்டை அரண்மனை அரசாங்கத்தால் நடத்தப்படும் musium அனைத்திலும் ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாயின் பெருமைகள் உணர்வு பொங்க பார்க்க முடிந்தது... எப்போழ்தும் பெண்களின் வாழ்வு போராட்ட களமோ...

சைவ உணவு கிடைப்பது சற்றே அரிதாயிருந்தது..களிமண்ணும் சுண்ணாம்பும் கலந்து பூசப்பட்ட மேற் கூரையில்  சிதைந்த நிலையிலும் அழகுடன் பரிணாமளிக்கும் ஓவியங்கள்..

சிறிய அரண்மனை நகருக்கு மத்தியில உள்ளது அதன் வெளியில் வந்தால் சாலை   ஓரத்தில் தள்ளு வண்டியில் முக்காடிட்ட வயதான பெண்மணி ஒருவரின் தேனீர்  கடை இருந்தது... அவர்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக பாலை காய்ச்சி கண்டிப்பாக இஞ்சி போட்டு வெறும் ஐந்து ரூபாய்க்கு வாழ் நாள் முழுமைக்கும் மறக்க முடியாத டீ... அவரின் எளிமையான முகம் அப்படியே நெஞ்சில் இருக்கிறது..

கஜுராஹோ வில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஊரசுற்றினோம்.... என் நீண்ட தோள் பையை ஹாண்டில் பாரில் மாட்டியிருந்தேன்  ஒரு ஏற்றத்தில் பெடலில் கால் வைத்து ஏறி இறங்கும்போது பட் என்ற ஒலியுடன் ...நெஞ்சு முன் பாரில் ஓங்கி அடிக்க தங்கும் அறை வந்து பார்த்த போது அப்பளமாய் நொறுங்கி போயிருந்தது மொபைல் போன்...

உலகத்துடனான எல்லா தொடர்பும் துண்டிக்கப் பட்டது...whatsup ல் வேறு இல்லை, நாம் உயிரோடு இருப்பதே தெரியாதே... ஒவ்வொரு முறை தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லும் போதும் எனது இறகுகள் விரிந்து கொண்டே பறந்தன...

Sunday, August 2, 2020

மனசெனும் மாயா(ய) விசை -1

                       

மனசு எது சார்ந்து இயங்குகிறது.. உடல்சார்ந்தா, உயிர் சார்ந்தா.. எவ்வாறு தவிர்த்திடினும் நினைவுகளால் எண்ணங்களால் அலைகளியும் மனதை எங்கு சென்று நிதானிப்பது ,பயணங்களிலா... ஆசை நிராசை விருப்பு வெறுப்பு  சுழன்று அடிக்கும் மாய(யா) விசை மனசே நீ தானா...

ஓர்ச்சா வின் சாலைகள் சுத்தமானவை , கஜுராஹோவிலிருந்து கிளம்பிய போது ஓர்ச்சா வரும் எண்ணம் இல்லை..கொரியன் ஒருவர் உடன் பயணித்தார்.. அவர் தான் ஓர்ச்சா பற்றி கூறினார்.. மத்தியப்பிரதேசத்தில் உள்ளது ஓர்ச்சா ..கிட்டத்தட்ட எழுநூறு வருடங்களுக்கு முன் குளியல் அறை கழிப்பறை என்று திட்டமிட்டு கட்டப்பட்ட பல அடுக்குகள் கொண்ட அரண்மனை (planned multi storied palace)..    ஓர்ச்சாவில் கோட்டையும் கோவிலும் அரண்மனையும் இருந்தது.. பெரிய கடாயில் காய்ச்சிய பால் இரவும் கிடைக்கும்..சற்றே அமைதியான ஊர்.. கஜுராஹோவிலிருந்து இரயில் வண்டி சிறிதே மெதுவாக நகர்ந்த போது இறங்கிகொண்டோம்..

காசியில் கிருஷ்ணமூர்த்தி (ராஜ்காட்)
பவுணடேஷனின், உலகளாவிய கூடுகைக்கு சென்றபோதுதான் கஜுராஹோ, ஓர்ச்சா, ஜான்சி க்கு பயணித்தது..

ராஜ்காட் க்ரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் பல ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது... வனத்தின் உள்ளே நடை பாதையில் நரிகள் எந்த இடையுரும் இன்றி நடமாடிக்கொண்டிருக்கும்... முகேஷ் குப்தா அந்த இன்ஸ்டிடியூடில் தான் இருக்கிறார்.. சிரித்த முகத்துடன் சிரிக்க சிரிக்க பேசும் அவரை மிகவும் பிடித்தது.. அப்படி ஒரு தோழமை...என்னை இஸ்ரேல் க்கு போக சொன்னார்.. அங்கே ஒரு commune இருப்பதாகவும் அந்த life style எனக்கு பிடிக்கும் என்றும் சொன்னார்...எல்லாவற்றையும் கேட்டுவிடுகிறதா மனது...

காசியின் நெருக்கடியான சந்துகளில் கடாயில் பால் காய்ச்சப் படுகிறது... மணிகர்ணிகாவில்   ஒன்றன் பின் ஒன்றாக இறந்த உடல்கள்  சிதையில் இடப்படுவதை கண்ணுற்ற இரவு தூக்கம் தொலைந்தது.. கங்கா ஆரத்தி ஒருபுறம் ....உடல் முழுக்க திருநீறு பூசிய நிர்வாண சாமியார்கள் .மிக மலிவு விலையில் நடையோர ஓவியங்கள் , சந்து சந்தாக நுழைந்து துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு மத்தியில் நடந்து காசி விசுவநாதரை வணங்குவது என்று காசி ஒரு வித்தியாசமான அனுபவம் தான்....ஆ அந்த படகில் போனோமே கங்கையில்...அந்த பாங் எனும் பணத்தை ருசிக்காமல் வந்தது இன்றளவும் வருத்தம் தான்...

இந்த கோரானா சமயத்தில் எவ்வாறு இருக்கும் காசி...

இந்தியாவில் எனக்கு பாண்டிச்சேரிக்கும் மணாலிக்கும் , ஹிமாச்சல்  பிரதேசத்திற்கும்,  ஸ்ரீ நகர் கும்,  ஹம்பிக்கும் கோகர்ணா விற்கும் இணையாக பிடித்த ஊர் கஜுராஹோ.....

ஊரே மோனத்தில் ஆழ்ந்து கிடக்கும்.... மக்கள் துயில் எழும்புவதே 7.00 க்கு மேல் தான் எந்த பரபரப்பும் இல்லாமல் அனாயாச பொறுமையுடன் இயங்கும் ஊர்...தெருக்கள் மிகவும் சுத்தமாக இருக்கும்...cycle வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றினோம்... ஆம் காலையில்  ஊர் நடுவில் பெரிய குளத்தை பார்த்த படிக்கு ஒரு டீ கடை இருந்தது.. தினமும் அவர் நிதானமாக போடும்இஞ்சி டீ யில் தொடங்கும் நாள், இரவு ஒரு சிறிய மைதானத்தில்  கூடும் நடை வண்டி உணவகங்களில் முடியும்...ஒரே ஒரு wine shop இருந்தது... குட்கா போட்டு நிறைவடைந்து விடுவார்கள் போல...

ஒரு பழம் பொருட்கள் விற்கும் தனியார் கடை யில் மிகவும் வித்தியாசமான அழகான கைவினை பொருட்கள் கிடைத்தன...

அரசு தினமும் நடத்தும் நாட்டுப்புற நடன நிகழ்வு ஒன்று உண்டு..உண்மையின் உண்மையில் அவ்வளவு அற்புத நடனங்கள்..
கஜுராஹோ வின் light show மிகவும் பிடித்தது...

அழகான சிற்பங்கள்..அழகான ஊர்...Wednesday, July 29, 2020

யாம்...


யாம் காற்றாய் சங்கமிப்பவர்கள்....
எம் இரவுகளின் காலங்கள் வானின் நீள அகலங்கள்...
நிலவும், புவியும், வெளியும் அற்ற போலிகள்.... கலாச்சார காவலர்கள் நான்கு சுவற்றிற்குள் மடியட் டும்...
யாம் முத்தங்களை நட்சத்திரங்களாய் விண்ணில் மிதக்கச் செய்வோம்...அவை புவியிறங்கி வண்ணத்துப்பூச்சிகளாய் மனிதம் வளர்க்கட்டும்......

Tuesday, July 28, 2020

                      Dancing of Birds ---- 4


செம்பூத்து எப்பவும் அருவி மரத்துக்கு வருகிறது..(greater coucal) அடர் செம்பு நிறத்தில் கருப்பு முழுவண்ணத்தில் கண் அடர் சிவப்பு நிறத்திலும் இருக்கும், ஏதோ மந்திரத்தை ஜெபிப்பது மாதிரி  ஒரு சப்தம்  கொடுக்கும்..எனக்கு செம்பூத்து பிடிக்கும்.. அது தேவேலோகப் பறவையாம்...அது மட்டுமில்லை எல்லாப் பறவைகளுமே தேவேலோகப் பறவைகள் தாம்...

இரண்டு தினங்களுக்கு முன் ஒரு மாலை நேரத்தில் வானம் கருமை படர்ந்து குளிர் காற்றுடன் மழைக்கு முன்னோட்டம் பார்த்துக்கொண்டிருந்தது நானும் ஜன்னல் வழி வானம் பார்த்துக்கொண்டிருந்தேன், மேகம் கூடிக்கொண்டிருந்தது ஒரே ஒரு கழுகு மட்டும் வானத்தில் மிக உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது..கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அந்த உயரத்திலேயே பறந்து கொண்டிருந்தது..நான் தான் சோர்வுற்று வந்தமர்ந்து கொண்டேன்..

கழுகு அது பறக்கும் உயரம் எதையும் லட்சியம் செய்யா பயமறியா பார்வை ஏனோ கழுகை பிடிக்கும் ,  zoo வில் அடைத்து வைத்திருப்பதை கண்ணுறும் போது மனசுள்
சொல்ல முடியா அழுத்தம் தோணும்.. மடப்பசங்களா அதன் உயரம் வேறு அதன் பார்வை வேறு ஏன் இப்படி அடைத்திருகி றீர்கள் என்று தோன்றும்....கார்த்தி கிட்டே ஒரு தடவை சொன்னேன் ஏன் boss  VOC park ல அந்த hindu office பக்கம் வளைவு எடுத்து LIC சிக்னல் வர்றப்போ வெளிய இருந்து பார்த்தாலே zoo ல கழுகு அடைக்கப்பட்டது தெரியுமே பார்திருக்கீங்களா...

ஆமா boss பார்த்திருக்கேன்.. ஒரு case போட்டு அதை திறந்து விட சொல்லணும் பாஸ்..இல்லே night போயி பூட்ட ஓடைச்சிடுவோமா..இப்படியாக நாங்கள் பேசிக்கொண்டதுண்டு....கழுகிற்கு அது பறக்கும் உயரம் தெரியுமா....மழையும் காற்றும் கண்டும் தன் இடம் தேடி ஓடாமல் நிலை நின்று எப்படி பறக்கிறது...

நம் உயரம் என்ன இயல்பில் நாம் யார் சுற்றமும் சூழலும் புறந்தள்ளி இயல்பில் யோசிப்போமாயின் மூச்சு திணற அழுந்திக்கொண்டிருக்கும்  மனசோட சின்ன கதறல் கேட்கும்....

நேற்று திவ்யா phone ல ஸ்ரீ எங்கே... Hosur ல திவ்யா ..கோயம்புத்தூர் போகலியா?...இல்லே போல... ஏனோ coimbatore ரோட நெருக்கம் கொஞ்சம் வருசமாவே பயமுறுத்துது.. ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் பெருக்கிக்கொண்டிருக்கும் வாகனங்கள் வளர்ச்சி வளர்ச்சி என்று வந்துகொண்டிருக்கும் பாலங்கள் விரிவு படுத்தப்படும் சாலைகள்... எதற்கோ தோண்டி மூடப்படும் குழிகள்...இதோ மற்ற அழிவின் பாதையில் செல்லும் பெருநகரங்களின் வரிசையில் கோவையும்...

கார்மேக குடையின் கீழ் பறக்கும் கழுகும்..மிக மெதுவாக தாழ பறக்கும் செம்பூத்தும்  கொஞ்சமாய் வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு செல்லும் சிட்டுக்குருவியும்... இன்னும் மனிதர்களை தவிர்த்து தன் இயல்பில் வாழும் வேறு உயிரினங்களும் கூடி வாழும் இடத்தில் தான் ,, மனமே பூவாய் மலரும் வாழ்வை வாழ முடியும் இல்லையா….

Monday, July 27, 2020

                        Dancing of Birds ---- 3
 தன்னிச்சையாக சில கதவுகள் தாழிட்டு கொள்ளும் அப்படி நாவும் சிலசமயம் தன்னுள் அடங்கிக்கொள்கிறது..நா மூடிக்கொண்டால் மட்டும் மனம் அடங்கிவிடுகிறதா..அப்பொழுதான்  மனம்  அதிகம் பேசுகிறது...

தொட்டான்சிணுங்கி  செடியை (touchme not) பார்க்கும் பொழுதெல்லாம் அதை சீண்டிப்பார்பதுண்டு...நாம் தொட்டவுடன் இலையை மூடிக்கொள்ளும் நம்மிடம் கோபித்துக்கொள்வது மாதிரி ..என்ன மாதிரியான அற்புதம்அது, கண்முன்னே          உணர்வால்  தன்னை உணர்த்தும் உயிர்...

எதேச்சையாக தோழி ஒருவர் நீயா நானா நிகழ்வின் ஒரு பகுதியை காண்பித்தார் அதில் ஒரு பெண், தான் திருமணத்திற்கு  தன் தாய் வீட்டில் 50 சவரன் நகையும் 50 புடவையும் 50 செட் சுடிதாரும் கேட்டார்.. இன்னொரு பெண் தனக்கு தாங்கள் குடியிருக்கும் வீடும் அதற்கு சற்றே தொலைவில் உள்ள இடமும் தனக்கு பெற்றோர் கொடுக்க வேண்டும் எனவும்  365 புடவையும் 365 சுடிதாரும் கேட்டார்..நிகழ்வை நடத்தும் கோபிநாத் ஏன் அந்த வீடு எனகேட்ட தற்கு அதில் தான் வாடகை வருகிறது தான் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கலாம் என்றும் மேலும் ஒரு முறை போட்ட துணியை அந்த வருடத்தில் திரும்பவும் அணியக்கூடாது என்று தான் விரும்புவதாகவும் சொன்னார்..
உடன் camera இந்த பெண்களை பெற்ற அம்மாக்களை focus செய்கிறது.. அவர்கள் பெருமிதத்தோடு தங்கள் பெண்களை பார்க்கிறார்கள்..

தன் உரிமைகளை ஒரு பெண் கேட்பதை பற்றி இதில் கேள்வி எதுவும் எழவில்லை எனக்கு...ஒருவர் தன்னை உணர்தலும் தன்னை உணர்த்தலும் இவ்வாறா என்று கேள்வி எழுகிறது..

பரஸ்பரம் இருவர் விரும்புகின்றனர்.. பெண் தன் வீட்டில் கூற அவர்களும் பெண்ணின் விருப்பத்தை  மதித்து பிள்ளை வீட்டில் பேச அவர்கள் சாதி எல்லாம் தங்களுக்கு இணையானது தான் என்று விசாரித்துக்கொண்டு பின் எவ்வளவு பவுன் நகை போடுவீங்க என்றும் மாப்பிள்ளைக்கு இரண்டு பவுனில் செயின் மற்றும் திருமண செலவு முழுதும் பெண்வீட்டார் ஏற்று நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.. நன்றாக படித்து மிகவும் அழகாக இருக்கும் அந்த பெண்  நல்ல வேலையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டாருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கிறது  பையனிடம்  பேசி பார்த்தபோது பெண் வேலைக்கு போக வேண்டுமா போகக் கூடாதா என்று அவரே முடிவு எடுப்பார் என்றும் தான் திருமணம் செய்து கொள்வதே தன் தாயை பார்த்துக் கொள்வதற்குத்தான் என்றும் கூறியுள்ளார்...

கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட பெண்ணின் பெற்றோர் இது செய்வது பெரிய விஷயம் இல்லை ஆனால் காதல் எனும் வார்த்தைக்கு நீங்கள் புரிந்து கொண்டது என்ன,  பரஸ்பர புரிதல் விட்டுக்கொடுப்பதும் இயல்பாக வரனும் அவர்கள் அம்மாவிற்க்கு மட்டுமே என்றால் உன் சுயம் எங்கு மதிக்கப்படும் என்றும் கேட்டுள்ளார்கள்..

Pre KG LKG UKG  மூன்று வருடங்கள் பள்ளி 12 வருடம் கல்லூரி 4 வருடம் கிட்டத்தட்ட 19 வருடங்கள் படிப்பு வாழ்வை பற்றிய எவ்வித பிம்பத்தை மனிதர்களிடம் உருவாக்குகிறது...

எல்லாமே வியாபாரம் பொருளாதாரம் தானா.. இப்படியான சிந்தனையில் ஒன்றாய் வாழ ஆரம்பித்தால் 50 வருட தாம்பத்தியத் தை வாழ்வது தான் எங்கனம்...

வாழ்வை, நிதர்சனத்தை தொலைத்து விட்டு வாழ்வின் சாயலில் ஏதோ ஒன்றில் வாழும்போது , நினைவில் கொள்ள வேண்டியது செயற்கை மலர்கள் மனம் தருவதில்லை  என்பதுதான்...

Thursday, July 23, 2020

                          Dancing of birds ---2


I want you to want me...
I need you to need me...
I'd love you to love me...
I"m begging you to beg me...
I want you to want me..

தினமும்  அணில்களுக்கென்று balcony யில் ஏதாவது வைப்பது வழக்கம். இங்கு எல்லா வீடுகளிலும் தென்னை மரங்கள் வீட்டுக்கு இரண்டாவது இருக்கிறது.. அணில் பயந்து பயந்து தான் வந்து அதற்கென வைத்த உணவை எடுக்கிறது.. யாரும்அங்கு இருப்பது தெரிந்தால் வருவதில்லை ஏன் மனிதர்களிடம் சக உயிர்கள் பெரும்பாலும் நெருங்குவதில்லை , எதனால் அவை விலகுகின்றது, பயந்து ஓடிப்போகின்றது...

காகமோ அணில்களோ நெருங்கி வராதா என்று ஏக்கமாக இருக்கும்...இயல்பில் கருணையை எங்கோ மனிதனிடம் இருந்து காவு வாங்கி விட்டது..சில விலங்குகளை பறவைகளை பழக்கப்படுத்தி வைக்கமுடியும் ஆனால் இயல்பில் இருக்கும் ஒரு harmony எங்கு போயிற்று...

இந்த பழக்கப்படுத்திய நடைமுறைகளுக்கு நாமும் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம் ..வலைகளுக்குள் இருப்பதே பாதுகாப்பானது என்று உணர பழக்கப்படுத்தப் பட்டோம்..நடைமுறைகள் நம்மை சிந்திப்பதில் இருந்து விலக்கு அளித்து  ஒரு comfort zone  க்குள்  வைத்து விடுகிறது..

Little Forest "  ன்னு south korean  படம் பார்த்தேன்.. you tube ல இருக்கு sub title இருக்கு...ஒரு கவிதையான படம்..சொல்ல ஆரம்பிச்சா முழு கதையையும் சொல்லணும் ஒவ்வொரு காட்சியும் ஒரு மெல்லிசை தான்.அதுல ஒரு பொண்ணு வரும் , ஒரு சூழல் அவளை அவ கிராமத்தை நோக்கி நகர்த்தும்... அவோளோட பால்ய நண்பன் city ல  யாருக்காக தன் சுயத்தை இழந்து வேலை செய்யனுங்கிற  சிந்தனையில்  அவனோட நிலத்திலேயே அவன் வேலை செய்வான்...அந்த பெண் அவ அம்மா பத்தி கொஞ்சம் கொஞ்சமா  புரிஞ்சிக்கிறது ன்னு நிறைய உள் பயணங்களை கொடுத்த படம்....

 Shobin நடிச்ச அம்பிலி  அதே மாதிரி வேற ஒரு perception  கொடுத்த படம்....வானம் இறைச்சிட்டு போற மழைத்துளி மாதிரி ...வாழ்வை அதன் இயல்பியலோடு எந்த வட்டத்துக்குள்ளும் வலைகளுக்குள்ளும்  இல்லாமல் , நேர்மையாய் நம் விருப்பத்தை நோக்கி செயல்படும் வித்தையை நாமே தான் கண்டுபிடிக்க வேண்டும்.. அதை மட்டும் செய்து விட்டோமானால் நமக்கே நமக்கான வாழ்வில் நிமிடத்துக்கு ஒரு பூ மலர்வதை யார் தடுத்திட முடியும்....

Wednesday, July 22, 2020

                       Dancing of birds.. --------1
அடர்ந்து பெய்து கொண்டிருந்தது மழை..ஓசூர் அப்படித்தான்,மழை வரம் பெற்ற ஊர்...ரொம்பவும் மனசுக்கு பிடிச்ச ஊர்..எட்டி பிடிச்ச மாதிரி விவசாய நிலங்களும் கிராமங்களும் இருக்கிற ஊர்..மத்திகிரி தேன்கனிக்கோட்டை கும்ளாபுரம், தளி ன்னு சிறிய கிராமங்கள் இருக்கிற அழகான சூழல் அமைந்த ஊர்..ஜன்னல்  வழி மழை சுகம்..சற்றே முன்பு இரண்டு அணில்கள் கொஞ்சி விளையாடிட்டு இருந்தது, ஒன்ன ஒன்னு பிடிச்சு தள்றதும் என்னமோ பேசிக்கிறதும்,,, ஆ ரொம்ப நேரம் பார்த்திட்டு இருந்தேன்.. அப்பதான் மழை வந்தது...

நிறைய பறவைகளை இங்க பார்க்கமுடியும்  கொஞ்சநாள் முன்னாடி dancing of Birds அப்டின்னு ஒரு BBC documentary பார்த்தேன், அப்படி ஒரு அழகு ஓவ்வொரு பறவையும் வேற வேற வண்ணங்கள்ல , தீட்டப்பட்ட ஓவியங்கள் மாதிரி ...ஒவ்வொரு பறவையும் தனக்கான இணைக்காக அவ்வளவு மெனக்கெடுது, ஒரு பறவை தன்னோட இடத்தை  பூ வச்சு அழகா ஆக்குது..இன்னொரு பறவை தன் இடத்தில விழுந்த அத்தனை மரத்தின் இலைகளை சுத்தமா கூட்டி எடுத்த மாதிரி clean பண்ணிட்டு பத்து டான்ஸ் move ments  பண்ணி காமிக்குது தன் இணையை கவர்வதற்கு ,ஒன்னு விதம் விதமா பாட்டு பாடுது... ஒன்னு மிக நேர்த்தியா வீடு அதற்கான இருப்பிடத்தை கட்டுது ,  அதுங்க அத்தனையும் இயற்கை விதியை உணர்ந்து  வாழப்பழகிய உயிர்கள்..இன்னமும் நமக்கான இணையை யார் யாரிடமோ கேட்பவர்களாக அம்மாவும் ஆட்டுக்குட்டிகளும் நிர்ணயம் செய்யும் மனிதர்களாக இருக்கிறோம்.. இன்னமும் பணத்தை மதிப்பீடுகளை பார்த்து மனங்களை தொலைப்பவர்களாகிறோம்..

ஏன் நம்மிடம் மனம் என்பது கண்டுகொள்ளப்படா ஒன்றாகி விடுகிறது.. தாகூரின் ஒரு சிறுகதை சுபா என்ற ஊமை பெண்பற்றிய கதை அது..அவளின் எண்ணங்களையும் விருப்பங்களையும்  எவரும் கேட்கவும் மாட்டார்கள்.. அவளால் எதையும் கூறவும் முடியாது.. அவளது ஆசைகள் கண்ணீருடன் முடங்கிப்போகும்...ஆணாகட்டும் பெண்ணாகட்டும் கணக்கீடுகளின் அளவீடுகளுக்குள் எவ்விதம் வாழ்வை பொருத்தி பார்க்க முடிகிறது..

இப்படியான பார்வைகள் தான் இப்போதிருக்கும் இந்த நிலைதான் வாழ்வை சிதைத்துள்ளது...லச்சக்கணக்கில் LKG யில் கட்டிய  பணம்  addmission போட்ட பாவத்திற் க்கு bus fees குழந்தை இன்னும் பள்ளி செல்லவே இல்லை.. ஆனாலும் பெருமைகள் இன்னமும் விரிந்து கொண்டுதான் உள்ளது... உறவுகளில் மனிதன்  போடும் கணக்குகள் அதி நஷ்டமாய் அவனிடமே சேர்கின்றன என்பதை மனம் உணர்தலன்றி ஒருவர் அதை அறிய வாய்ப்பில்லை...

இப்பிறப்பில் வாழ்வை கடப்பதெனின் ஏதாவது ஒன்றை கட்டிக்கொள்ளுங்கள், வாழ்வை வாழ்ந்து பார்க்கவேண்டுமெனில் மனதினை உற்று நோக்குங்கள் அதனின் குரல் கேளுங்கள் வாழ்வு மலர்வதற்கு ...