Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, January 2, 2018

        பறத்தலன்றிய பறவை                  வாழ்வின் கதை.....


         பறவை ஓன்று மானுடவாழ்வில் விருப்பம் கொண்டது,அதுகடவுளிடத்தில் பெற்ற விஷேச வரத்தின் படி தன் இறக்கையை கழட்டிவிட்டு மானுட உருவம் பெறவும் இறக்கையை அணிந்து கொண்டால் பறவை உரு பெரும் சக்தியும் பெற்றிருந்தது... ஓர் மானுடப்பெண்ணை அது மனதார விரும்பியது,  இயல்பாய் அவளிடம் எடுத்துச் சொன்னது தான் பறவை என்பதை..அவளும் சிறு வயதிலிருந்தே பறவைகள் மேல் ஒருகாதலுடனிருந்ததால் அதனை மணக்கஆவல் கொண்டாள் அதனுடன் சேர்ந்து  பறப்போம் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டாள்.. இவ்வாறாக பறவையும் மானுடப்பெண்ணும் இல்லறத்தில் இணைந்தனர்...
 மானுட சமூகத்தில் திருட்டு பயம் அதிகமென்பதை பறவைக்கணவரிடம் அப்பெண் கூற இறக்கை பத்திரமாய் பாதுகாப்பறைக்குச்சென்றது... மீண்டும் பறக்கும் போது எடுத்து அணிந்து கொள்ளலாம் என்பதால் பத்திரமாய் பூ ட்டப்பட்டது...பல வீடுகளில் விருந்துபச்சாரம் நடந்ததால் பறவைக் கணவருக்கு வேறு எங்கும் செல்லவோ தன் பறவை நண்பர்களை சந்திக்கவோ நேரம் இலாமல் போய்விட்டது, பறவைக் கணவரும் நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார்...அவ்வப்போது விருந்தினால் ஏற்ப்பட்ட வயிறுக்கோளாறுகள் மருத்துவரிடம் சென்று தீர்க்கப்பட்டது, முதன்முதலாக பறவை கணவருக்கு ஆங்கில மருந்தும் மருத்துவமும் அறிமுகமானது...

                பறவைக்கு சமுதாயக்கடமையும் வீட்டுக்கடமையும் நினைவூட்டப்பட்டது...சமுதாயக்கடமையாய் வீடும் காரும் பொருளாதாரக்கடமையும்,வீட்டுக்கடமையாய்  ஒரு குழந்தை ஆவது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது, பறவைக்கு பணம் காசு தெரியவில்லை, படிப்பறிவும் இல்லை, வேலைக்கு அப்பெண் செல்ல, பறவை வீட்டைப் பார்த்துக்கொள்ள  வருடத்திற்குள் ஒரு குழந்தை பிறந்தது,...அறுவை சிகிச்சை செய்தே குழந்தை எடுக்கப்பட்டது, குழந்தை மஞ்சளாக உள்ளது பச்சையாக உள்ளது என்று சொல்லி பதினைந்து நாள் கழித்தே வெளியில் விட்டார்கள், குழந்தைக்கு சளி நன்றாய் போனால் காய்ச்சலும் காய்ச்சல் நன்றாய் போனால் பேதிஆவதுமாகவும் எதுவுமில்லை என்றால் தடுப்பூசி போடவுமாக எப்பொழுதும் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய தாயிற்று, மருந்து் வாசமும் மருத்துவ மனை வாசமும்  பறவைக்கு மிகுந்த மனச்சோர்வையும் ஒவ்வமையையும் கொடுத்தது, குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டது பறவைகணவன்....

                  பறத்தலைப்பற்றிய ஞாபகம் வரும்போதெல்லாம் இறகை எடுத்து வருடிக்கொடுக்கும்...ஒரு நீண்ட பெருமூச்சுடன்  துணையிடம் பகிர்ந்து கொள்ளும்... அப்பெண்ணுக்கும் ஊர் சுற்றுல்  ஆசையெனினும் கடமை கட்டிப்போட்டது,  வீட்டின் பெரியவர்கள் அவரவர்களின் நோய்களோடு போராடிக்கொண்டிருந்ததால் எந்த உதவியும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை...
             
வருடங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தது.. இடையிடையே சில உறவினர்களின் காதுகுத்தும் கல்யாணமும் குழந்தைபேரும், சிலஉறவுகளின் மரணமுமாக வாழ்க்கை வெகு பரபரவென்று சென்று கொண்டிருந்தது, வீட்டில் சமைத்து பிற வேலைகள் பார்த்து , ஒரு சோர்வும் சலிப்பும் ஏற்பட்டது பறவை கணவருக்கு.... வேலை ஆட்கள் இருந்தாலும் அவர்களை பார்த்து வேலை வாங்குவதும் ஒரு வேலை தானே...

                      உறவினர்கள் பலர் தங்கள் பழைய கார் களை மாற்றி புதிய மாடல் கார்களை வாங்கி விட்டதால் இவர்களும் கார் மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்...அதற்கான செலவுகளும் அதிகமானது,..பறவைக்கணவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லாததான தன் முந்தைய பறவை வாழ்வு ஞாபகத்துக்கு வந்து அழுகை வந்தது..இவ்வாறு வாழ்வை அமைத்துக்கொண்ட சில பறவைகளை விசாரிக்க அவர்களும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தனர்,..சிலர் தங்களை பறவைகள் என்று மறந்து விட்டிருந்தார்கள்...அதுவும் நல்லதுதான்...
         
                 அவ்வப்போது சிறகை எடுப்பதுவும் பார்ப்பதுவும் பின் வைப்பதும்  அதை  தொடர்ந்து எங்காவது பறக்கும் ஏக்கம் பறவையை துன்புறுத்தியது...மானுட மனைவிக்கு அது புரிந்திருந்தாலும் தானும் உடன் பறக்க ஆசைப்பட்டதும் நினைவிற்க்கு வந்தாலும் வீட்டின் பொருளாதார தேவையும் வங்கிக் கடனும் குழந்தைகள் பள்ளி செல்வதால் விடுப்புக்கு வாய்ப்பு இல்லாமலும் போய்க்கொண்டு இருந்தது... அவ்வப்போது சில நிகழ்வுக்குச் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாலும் அதுவும் ஒரு பதட்டதுத்துடனேயே நடந்தது...குழந்தைகளின் வீட்டுப்பாடம் , அலுவலக வேலை ,உறவினர்கள் இல்ல கொண்டாட்டங்கள் துக்கங்கள் என்று நேரம்  பத்தாமல் போய்க்கொண்டிருந்தது...நண்பர்களும் சமுதாய நல் நிகழ்வுகளில் பங்கெடுப்பதும் இரண்டாம் பட்சமாயிற்று...நண்பர்களின் பொது நிகழ்வுகளின் நேரம் வீணானது என்று வீட்டின் பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டது, அவர்களின் அர்த்தம்?? மிகுந்த வாழ்வு உதாரணமாக்கப்பட்டது...
                     
                  தன் பறவை இனத்திடமிருந்து வரும் ஊரசுற்றுதலுக்கான அழைப்பை, போக சந்தர்ப்பம் வாய்க்காததால் மனத்தில்லாமல் ஒதுக்கி வந்தது, அது  வீட்டில் பெரியவர்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்களும் கடமையை நினைவூட்டிக்கொண்டுஇருந்தார்கள்,  இவ்வாறு ஊர் சுற்றிக்கொண்டு இருந்தால் சமுதாயத்தில் ஒரு மதிப்பும் இருக்காது எனவும் , குழந்தைகளுக்கு சேத்தி வச்சிட்டு போகணும் என்பதாலும் , கடமையையை செய்யப் பணித்தனர், பறவைக்கு பல சமயங்களில் தான் ஒரு பறவை என்பதே மறந்துபோயிற்று, ஞாபகம் வந்த சமயத்தில் கடமை நினைவூட்டப்பட்டது, அது அவ்வப்போது நினைத்துக்கொள்ளும் தான் மட்டும் இப்பெண் மீது ஆசை கொண்டிராமலிருந்தால் பிரச்சனையே இல்லை என்று எண்ணிக்கொள்ளும், ஆனால் அவளும் நல்லவள் தான் ,ஒரு சமயம் தன் பறவைஇனத்திடமிருந்து ஒரு அழைப்பைப்பெற்றது , இம்முறை பல காடுகள் அழிவுற்று , பல காடுகள் சுருங்கிப்போய் விட்ட நிலையில் இரண்டு நாட்கள் பறந்து சென்று ஒரு செழுமையான அழகான அருவிகளும்   நீரூற்றுக்களும் உள்ள காட்டிற்க்கு சென்று வருவதாகத்திட்டம் ,வைத்து அது தான் அந்த அழைப்பாகவும் இருந்தது...முன்பெல்லாம் பறவை இம்மாதிரி போகும்போது அது உண்ணும் பழங்களின் கொட்டைககள் எச்சங்களில் வேறு பல புதிய மரங்கள் முளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தது, சிலமரங்கள் இவ்வாறு தான் முளை க்கும், உதாரணத்திற்கு சந்தன மரங்களை எடுத்துக்கொள்வோம், அவை ஒரு பறவை தின்று போட்ட எச்சத்தால் தான் நன்கு வீரியமுடன் முளைக்கும்,  இம்மாதிரி பறவை சுற்றுச் சூழலுக்கு பெரும் பணிகள் செய்து வந்தது , எப்பொழுது அது மனித வாழ்வை வாழ ஆரம்பித்ததோ அவ்வளவும் முடிந்து போனது, எதுவும் செய்ய இயலாமல் போனதை நொந்துபோய் நினைத்துக்கொண்டது
                     
                         பறவையின் பறவை நண்பர்கள் அதை குதூகலத்துடன் வரவேற்றனர், அவர்கள் அனைவருமே மனிதர்களை அவர்களின் பேராசை சுயநல புத்திக்காக வெறுத்தனர், ஏதோ கரணத்திற்காய் இயற்கையை, மரங்களை அழிப்பதை பறவைகள் வருத்தத்துடன் பேசிக்கொண்டனர்,
 உற்சாகமாய் போய்க்கொண்டிருந்த சமயத்தில் பரவைக்கணவரின் பிள்ளைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பாதியில் ஊர் திரும்பியது பறவை,...காலங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தது பிள்ளைகள் மொபைல் phone , tablet, laptop இவைகளை மிரட்டிப்பெற்றுக்கொண்டனர், பெற்றவர்களை  பிரிந்திருக்கத்தயாராயிருந்த அவர்களால் ஒருவிநாடிகூட மேற்கூறிய ஒன்றை க்கூட பிரிந்திருக்க முடியவில்லை பறவை தன் வயோதிகத் தை எட்டியது, யாருமே எதிர்நோக்காதருணத்தில் தன் காதல் மனைவியை நோயினால் இழந்தது, பிள்ளைகள் அவரவர் வாழ்வை இயந்திரத்தனமாய் எதற்க்காக உழைக்கிறோம் என்று தெரியாமல் கடிகாரத்தைப்பார்த்து எல்லாம் செய்து கொண்டிருந்தனர், காலையில் அவர்கள் அலாரம் வைப்பதை வழக்கமாக்கிக்கொண்திருந்தனர், மனிதர்கள் எல்லாருமே  காரணம் வைத்திருந்தனர், எதற்காகவும் அவர்களிடம் காரணம் இருந்தது,...பலவருடங்களுக்குப்பின் தன் இறகை எடுத்துப்பார்த்தது, பறவையின் இளமைக்கால கனவு போல் அது பலவண்ணங்களுடன் இறுகியிருந்தது....

No comments:

Post a Comment