Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, January 2, 2018

        பறத்தலன்றிய பறவை                  வாழ்வின் கதை.....


         பறவை ஓன்று மானுடவாழ்வில் விருப்பம் கொண்டது,அதுகடவுளிடத்தில் பெற்ற விஷேச வரத்தின் படி தன் இறக்கையை கழட்டிவிட்டு மானுட உருவம் பெறவும் இறக்கையை அணிந்து கொண்டால் பறவை உரு பெரும் சக்தியும் பெற்றிருந்தது... ஓர் மானுடப்பெண்ணை அது மனதார விரும்பியது,  இயல்பாய் அவளிடம் எடுத்துச் சொன்னது தான் பறவை என்பதை..அவளும் சிறு வயதிலிருந்தே பறவைகள் மேல் ஒருகாதலுடனிருந்ததால் அதனை மணக்கஆவல் கொண்டாள் அதனுடன் சேர்ந்து  பறப்போம் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டாள்.. இவ்வாறாக பறவையும் மானுடப்பெண்ணும் இல்லறத்தில் இணைந்தனர்...
 மானுட சமூகத்தில் திருட்டு பயம் அதிகமென்பதை பறவைக்கணவரிடம் அப்பெண் கூற இறக்கை பத்திரமாய் பாதுகாப்பறைக்குச்சென்றது... மீண்டும் பறக்கும் போது எடுத்து அணிந்து கொள்ளலாம் என்பதால் பத்திரமாய் பூ ட்டப்பட்டது...பல வீடுகளில் விருந்துபச்சாரம் நடந்ததால் பறவைக் கணவருக்கு வேறு எங்கும் செல்லவோ தன் பறவை நண்பர்களை சந்திக்கவோ நேரம் இலாமல் போய்விட்டது, பறவைக் கணவரும் நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார்...அவ்வப்போது விருந்தினால் ஏற்ப்பட்ட வயிறுக்கோளாறுகள் மருத்துவரிடம் சென்று தீர்க்கப்பட்டது, முதன்முதலாக பறவை கணவருக்கு ஆங்கில மருந்தும் மருத்துவமும் அறிமுகமானது...

                பறவைக்கு சமுதாயக்கடமையும் வீட்டுக்கடமையும் நினைவூட்டப்பட்டது...சமுதாயக்கடமையாய் வீடும் காரும் பொருளாதாரக்கடமையும்,வீட்டுக்கடமையாய்  ஒரு குழந்தை ஆவது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது, பறவைக்கு பணம் காசு தெரியவில்லை, படிப்பறிவும் இல்லை, வேலைக்கு அப்பெண் செல்ல, பறவை வீட்டைப் பார்த்துக்கொள்ள  வருடத்திற்குள் ஒரு குழந்தை பிறந்தது,...அறுவை சிகிச்சை செய்தே குழந்தை எடுக்கப்பட்டது, குழந்தை மஞ்சளாக உள்ளது பச்சையாக உள்ளது என்று சொல்லி பதினைந்து நாள் கழித்தே வெளியில் விட்டார்கள், குழந்தைக்கு சளி நன்றாய் போனால் காய்ச்சலும் காய்ச்சல் நன்றாய் போனால் பேதிஆவதுமாகவும் எதுவுமில்லை என்றால் தடுப்பூசி போடவுமாக எப்பொழுதும் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய தாயிற்று, மருந்து் வாசமும் மருத்துவ மனை வாசமும்  பறவைக்கு மிகுந்த மனச்சோர்வையும் ஒவ்வமையையும் கொடுத்தது, குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டது பறவைகணவன்....

                  பறத்தலைப்பற்றிய ஞாபகம் வரும்போதெல்லாம் இறகை எடுத்து வருடிக்கொடுக்கும்...ஒரு நீண்ட பெருமூச்சுடன்  துணையிடம் பகிர்ந்து கொள்ளும்... அப்பெண்ணுக்கும் ஊர் சுற்றுல்  ஆசையெனினும் கடமை கட்டிப்போட்டது,  வீட்டின் பெரியவர்கள் அவரவர்களின் நோய்களோடு போராடிக்கொண்டிருந்ததால் எந்த உதவியும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை...
             
வருடங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தது.. இடையிடையே சில உறவினர்களின் காதுகுத்தும் கல்யாணமும் குழந்தைபேரும், சிலஉறவுகளின் மரணமுமாக வாழ்க்கை வெகு பரபரவென்று சென்று கொண்டிருந்தது, வீட்டில் சமைத்து பிற வேலைகள் பார்த்து , ஒரு சோர்வும் சலிப்பும் ஏற்பட்டது பறவை கணவருக்கு.... வேலை ஆட்கள் இருந்தாலும் அவர்களை பார்த்து வேலை வாங்குவதும் ஒரு வேலை தானே...

                      உறவினர்கள் பலர் தங்கள் பழைய கார் களை மாற்றி புதிய மாடல் கார்களை வாங்கி விட்டதால் இவர்களும் கார் மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்...அதற்கான செலவுகளும் அதிகமானது,..பறவைக்கணவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லாததான தன் முந்தைய பறவை வாழ்வு ஞாபகத்துக்கு வந்து அழுகை வந்தது..இவ்வாறு வாழ்வை அமைத்துக்கொண்ட சில பறவைகளை விசாரிக்க அவர்களும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தனர்,..சிலர் தங்களை பறவைகள் என்று மறந்து விட்டிருந்தார்கள்...அதுவும் நல்லதுதான்...
         
                 அவ்வப்போது சிறகை எடுப்பதுவும் பார்ப்பதுவும் பின் வைப்பதும்  அதை  தொடர்ந்து எங்காவது பறக்கும் ஏக்கம் பறவையை துன்புறுத்தியது...மானுட மனைவிக்கு அது புரிந்திருந்தாலும் தானும் உடன் பறக்க ஆசைப்பட்டதும் நினைவிற்க்கு வந்தாலும் வீட்டின் பொருளாதார தேவையும் வங்கிக் கடனும் குழந்தைகள் பள்ளி செல்வதால் விடுப்புக்கு வாய்ப்பு இல்லாமலும் போய்க்கொண்டு இருந்தது... அவ்வப்போது சில நிகழ்வுக்குச் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாலும் அதுவும் ஒரு பதட்டதுத்துடனேயே நடந்தது...குழந்தைகளின் வீட்டுப்பாடம் , அலுவலக வேலை ,உறவினர்கள் இல்ல கொண்டாட்டங்கள் துக்கங்கள் என்று நேரம்  பத்தாமல் போய்க்கொண்டிருந்தது...நண்பர்களும் சமுதாய நல் நிகழ்வுகளில் பங்கெடுப்பதும் இரண்டாம் பட்சமாயிற்று...நண்பர்களின் பொது நிகழ்வுகளின் நேரம் வீணானது என்று வீட்டின் பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டது, அவர்களின் அர்த்தம்?? மிகுந்த வாழ்வு உதாரணமாக்கப்பட்டது...
                     
                  தன் பறவை இனத்திடமிருந்து வரும் ஊரசுற்றுதலுக்கான அழைப்பை, போக சந்தர்ப்பம் வாய்க்காததால் மனத்தில்லாமல் ஒதுக்கி வந்தது, அது  வீட்டில் பெரியவர்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்களும் கடமையை நினைவூட்டிக்கொண்டுஇருந்தார்கள்,  இவ்வாறு ஊர் சுற்றிக்கொண்டு இருந்தால் சமுதாயத்தில் ஒரு மதிப்பும் இருக்காது எனவும் , குழந்தைகளுக்கு சேத்தி வச்சிட்டு போகணும் என்பதாலும் , கடமையையை செய்யப் பணித்தனர், பறவைக்கு பல சமயங்களில் தான் ஒரு பறவை என்பதே மறந்துபோயிற்று, ஞாபகம் வந்த சமயத்தில் கடமை நினைவூட்டப்பட்டது, அது அவ்வப்போது நினைத்துக்கொள்ளும் தான் மட்டும் இப்பெண் மீது ஆசை கொண்டிராமலிருந்தால் பிரச்சனையே இல்லை என்று எண்ணிக்கொள்ளும், ஆனால் அவளும் நல்லவள் தான் ,ஒரு சமயம் தன் பறவைஇனத்திடமிருந்து ஒரு அழைப்பைப்பெற்றது , இம்முறை பல காடுகள் அழிவுற்று , பல காடுகள் சுருங்கிப்போய் விட்ட நிலையில் இரண்டு நாட்கள் பறந்து சென்று ஒரு செழுமையான அழகான அருவிகளும்   நீரூற்றுக்களும் உள்ள காட்டிற்க்கு சென்று வருவதாகத்திட்டம் ,வைத்து அது தான் அந்த அழைப்பாகவும் இருந்தது...முன்பெல்லாம் பறவை இம்மாதிரி போகும்போது அது உண்ணும் பழங்களின் கொட்டைககள் எச்சங்களில் வேறு பல புதிய மரங்கள் முளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தது, சிலமரங்கள் இவ்வாறு தான் முளை க்கும், உதாரணத்திற்கு சந்தன மரங்களை எடுத்துக்கொள்வோம், அவை ஒரு பறவை தின்று போட்ட எச்சத்தால் தான் நன்கு வீரியமுடன் முளைக்கும்,  இம்மாதிரி பறவை சுற்றுச் சூழலுக்கு பெரும் பணிகள் செய்து வந்தது , எப்பொழுது அது மனித வாழ்வை வாழ ஆரம்பித்ததோ அவ்வளவும் முடிந்து போனது, எதுவும் செய்ய இயலாமல் போனதை நொந்துபோய் நினைத்துக்கொண்டது
                     
                         பறவையின் பறவை நண்பர்கள் அதை குதூகலத்துடன் வரவேற்றனர், அவர்கள் அனைவருமே மனிதர்களை அவர்களின் பேராசை சுயநல புத்திக்காக வெறுத்தனர், ஏதோ கரணத்திற்காய் இயற்கையை, மரங்களை அழிப்பதை பறவைகள் வருத்தத்துடன் பேசிக்கொண்டனர்,
 உற்சாகமாய் போய்க்கொண்டிருந்த சமயத்தில் பரவைக்கணவரின் பிள்ளைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பாதியில் ஊர் திரும்பியது பறவை,...காலங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தது பிள்ளைகள் மொபைல் phone , tablet, laptop இவைகளை மிரட்டிப்பெற்றுக்கொண்டனர், பெற்றவர்களை  பிரிந்திருக்கத்தயாராயிருந்த அவர்களால் ஒருவிநாடிகூட மேற்கூறிய ஒன்றை க்கூட பிரிந்திருக்க முடியவில்லை பறவை தன் வயோதிகத் தை எட்டியது, யாருமே எதிர்நோக்காதருணத்தில் தன் காதல் மனைவியை நோயினால் இழந்தது, பிள்ளைகள் அவரவர் வாழ்வை இயந்திரத்தனமாய் எதற்க்காக உழைக்கிறோம் என்று தெரியாமல் கடிகாரத்தைப்பார்த்து எல்லாம் செய்து கொண்டிருந்தனர், காலையில் அவர்கள் அலாரம் வைப்பதை வழக்கமாக்கிக்கொண்திருந்தனர், மனிதர்கள் எல்லாருமே  காரணம் வைத்திருந்தனர், எதற்காகவும் அவர்களிடம் காரணம் இருந்தது,...பலவருடங்களுக்குப்பின் தன் இறகை எடுத்துப்பார்த்தது, பறவையின் இளமைக்கால கனவு போல் அது பலவண்ணங்களுடன் இறுகியிருந்தது....

Thursday, December 21, 2017

                         இடையுறு   விகிதங்கள்.......              
மூன்று தடவை வந்த missed call , அந்த நம்பருக்கு என்னை அழைக்கத் தூண்டியது,கோகிலா அக்காவின்  குரலை உள்வாங்க சற்று நேரம் பிடித்தது, என்ன ஸ்ரீ ஒருமாசமா try பண்றேன், உன்ன பிடிக்கவே முடியல, தொடர்பு எல்லைக்கு அப்பால் அப்பால் னு வருது என்றார், ஆமாங்க்கா நானே பக்கத்துல யார் மொபைலை வாங்கி கூப்பிட்டாலும் எனக்கும் அப்படித்தா சொல்லுது,,....சரி என்ன பண்றே எங்கிருக்கே,,,, அக்கா நா தோட்டத்திலே , மரம் வச்சிட்டு birds பார்த்திட்டு இருக்கேன்...

உனக்கு திருப்தியாஇருக்கா பிடிச்சிருக்கா யாருக்கும் விளக்கம் சொல்லணும்னு அவசியம் இல்லே சந்தோசமயிரு , School final கூட தாண்டாத  கோகிலாக்காவின் வார்த்தைகள் என்னை வியக்க வைத்தது, சில சமயங்களில் அப்படித்தான், சிலர் அவ்வளவாக படித்திருக்க மாட்டார்கள் , ஆனால் வாழ்க்கையை அசால்டாக சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்...

கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கும் பெரியப்பா, எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்டதும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது
அப்ப இளங்கோ அண்ணா பைத்தியம் பிடித்து ஓடியத்துக்கும் இப்போ பெரியம்மா cancer ல இறந்தப்பவும் சரி பெரியப்பா எல்லாவற்றையும் practical ஆக தான் பார்ப்பார், வட்டிக்கு விடுவதை எப்போதும் அவர் நிறுத்தியதே இல்லை, தேவையிருக்கிறவனுக்கு தேவையானப்ப தர்றேன், இதுல என்ன தப்பிருக்கு இதுவும் உதவிதான்  என்று சொல்லுவார்,

அவருடையது பண calculation mind, அது நமக்கு எப்பவும் ஒத்து வராது,  என்னை எங்கியாவது கூட்டிப் போ ஸ்ரீ ,  வடிச்சிகொட்டி பாத்திரம் தேச்சு , sema bore தெரியுமா , எங்கியாவது எங்கியாவது கூட்டிப்போ
இந்த மாதிரி கோகிலாக்களின் குரல்கள் சமீபமாக எனை பின்தொடர்ந்தவாறே இருக்கிறது.... குமார் மாமா நிறைய சம்பாதித்து நிறைய குடித்து நிறைய கறி திண்பவராயிருந்தார்

 குமார் மாமா இரண்டு (ஆண்)குழந்தைகள்  பெற்று சமூகத்துக்கு பெரும் தொண்டு புரிந்துள்ளார், பெரியப்பாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகளில் இருவர் தனித்தனியே இரண்டிரண்டு ஆணும் பெண்ணுமாகப்பெற்று சமுதாயத்துக்கு பெரும் பங்குஆற்றி உள்ளார்கள்,....பெரியப்பா ஒரு பெரிய lecture கொடுப்பார் அதில் ஆணுக்கான அடையாளப் பட்டியல் வாசிக்கப்படும் ஆண் சொந்தமா ஒரு வீடு கட்டணும் தென்னை மரம் இரண்டு வைக்கணும் ஆண் பிள்ளை பெறனும் இதெல்லாம் அதில் அடங்கும்...

கோகிலாக்காவுக்கு  புதியதாய் ஐந்தாவதாய் வாடகைக்கு விடுவதற்கு வீடுகட்ட வேண்டுமாம், அதற்கு தான் என்னை தேடிருக்காங்க, ஒவ்வொரு தடவை வீடுகட்டும் போதும் , மறக்காமல் போதும் சாமி இந்த மனுசன் இதய நோயோட ஒளச்சது, இந்த வாடகை ய வாங்கிக்கிட்டு கஞ்சி கூழு குடிச்சுக்குவோம்னு சொல்லிகிட்டே , அடுத்த வீடு கட்ட ரெடி ஆயிடராங்க, அவங்களுக்கு புதுசா ஒருக்கவலை , ஆதார் அட்டையை எல்லாத்துலயும் இணைக்கணுமாமே,, என்று கூறி எங்கேயாவது மாட்டிக்கொள்வோமா என்று ரொம்பவும் வருத்தக்கொண்டிருந்தார்

பெரியம்மாவின் ஞாபகங்களை வட்டி வசூல் time போக பெரியப்பா நினைத்துக்கொண்டிருப்பார், இல்லைன்னா அவரின் பிறந்த நாளிலோ பெரியம்மாவின் பிறந்த நாளிலோ அனாதை ஆசிரமத்துகுழந்தைகளுக்கு ஒரு நேர உணவு கொடுத்து  சமாதானம் தேடிக்கொள்ளக்கூடும்...

 எனக்கொரு மிகபெரும் கவலை  ஓலைப்பாளை யம் வந்த சிட்டுக்குருவி இன்னும் அரை கிலோமீட்டர் தூரமே இருக்கும் தோட்டத்து வீட்டுக்கு வரலை என்பதுவும் , கிணற்று நடுவில் இருந்த தூக்கணாங்குருவி கூடு எங்கு போயிற்று என்பதுமாய்........

Wednesday, December 20, 2017


விட்டுப் பறந்திடுவோம் ஓர் சிட்டுக்குருவி போலே....


ஓர் வாழ்வு எப்பொழுது நம்மை வாழ்வுக்குள் அழைத்துச் செல்கிறது தெரியுமா? அதன் விருப்பத்தை நாம் பூர்த்தி செய்யும் பொழுது, அது நம்மை ஒவ்வொரு நிமிடமும் பூந்தோட்டத்திற்குள்ளே அழைக்கிறது, நாம் அதன் கைகளை விடுத்துக்கொண்டு, வீட்டுச் சிறைக்குள், வேலைச் சிறைக்குள் சென்று விடுகிறோம்..... ஏதாவது ஒரு சின்ன விஷயத்திற்கு கூட  எல்லா வேலையும் முடித்துக்கொண்டு என்று ஆரம்பிப்பவர்களிடம் வாழ்க்கை இருக்கவே இருக்க முடியாது,....இக்கணமே முடிவு செய்து வாழுங்கள்,, வாழ்க்கை உங்கள் வசப்படும் ....


Tuesday, October 3, 2017


       நீ நீ நீ மட்டும்...

 கடல் கடலாய் நீலம் போர்த்திய கடலாய்..
கடல் கடலாய் கடந்து போகமுடியா பேரமைதியாய்....                      கடல் கடலாய் உள் சென்று பார்த்திடினும்,                             வெளிநின்று நோக்கிடினும்  உணர்தலுக்கப்பாலான ரகசியமாய்...
கடல் கடலாய் எனை உள்வாங்குகிறாய்...
ஓர் துளியாய் எனுள் நிறைகிறாய்...........  நீ நீ நீ மட்டுமே....

Monday, October 2, 2017

          கொஞ்சம் மெதுவாய் வாழ்வோம்....

     என்றேனும் தினைப்பணியாரமும் ( தேங்காய் சட்னியுடன்),cucumber cane juiceஉடன்சாப்பிட்டிருக்கிறீர்களா?.ஓர்வன்மம் அற்ற மாலையில் சற்றே மழை தூவிவிடும்நேரத்திற்கு முன்பாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க சிவக்குமார் சார் ஞாபகம் வந்தது,தொண்டாமுத்தூர் road ல்,  bharathiya vidiya bhavan school Road ல தான் அவர் வீடு..

காஷ்மீர் பூர்வீகம்,  Hindhi,  sanskrit,  Thamizh,  English  எழுதவும் படிக்கவும் தெரியும்...Jittu Krishnamoorthy யின் philosophy யில் ஈர்க்கப்பட்டவர், happy Bachelor..  கிட்டத்தட்ட 80வயது, LKG  ல இருந்து +2 வரை tuition எடுக்கிறார்...
இன்றைய பொழுது முழுமைக்கும் அவரிடம் பேச அத்துனை விஷயமிருக்கும்...

இரண்டு நாள் முன்பு பேசிக் கொண்டு (Phone la)  இருந்தபோது எப்ப வேணா வாங்களேன் என்றார்.. ஓரு பணியாரம் parcel வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்,  மலரரையும் கூட்டிக் கொண்டு சென்றேன் தூவானம் போல் தூவிக் கொண்டிருந்த வானம் வலுத்துக்கொட்ட ஆரம்பித்தது.. ஓரு யூகத்தில பாதையை அனுமானிக்க வேண்டி இருந்தது...அவர் வீட்டை அடைந்த போது வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்,  **********வரலியா எனும் கேள்வியுடன் எனை எதிர்கொண்டார்..

செந்தமிழன் அவர்களின் புத்தகம் சிலவற்றை கொடுத்தேன், எதுவானாலும் படிக்கலாம் என்று வாங்கிக் கொண்டார்.. இன்றைய கல்விச் சூழல், குழந்தைகள் மீதான பெற்றவர்களின் ஆதிக்கம், சூழலியல், தனிமனித சுதந்திரம், relationship எல்லாவற்றையும் ஓர் ஆழ்ந்த புதிய நோக்குடன் சிந்திக்கக் கூடியவர்,

இம்மாதிரியான மனிதர்கள் தான் உண்மையான நாகரீக வளர்ச்சிக்கும் உயர்ந்த சிந்தனைக்கும் விதையாய் இருந்தவர்கள்,  அவரவர் களின் உணவு ஆரோக்கியத்தை பேணமுடியா அவசர உலகத்தில்,  இவர் போன்றோரின் இருப்பு கண்டு கொள்ள யாருக்கும் நேரமிருக்காது, நல்ல சில மாற்றுச்சிந்தனைகளே மனித சமுதாயம் மேம்பட உதவும்..

வெளியே வந்து வண்டி எடுத்தபோது தொப்பலாய் நினைத்திருந்தேன்,  மழை வலுத்திருந்தது,  மனம் சிறகைவிரித்தும் சிறகுபோலாயுமாயிருந்தது...

Wednesday, August 30, 2017

                கள்ளம்  - தஞ்சை பிரகாஷ்..
                           ஓர் மீள் பார்வை

தூக்கம் தொலைத்த இரவுகளில் புத்தகம் தவிர துணையேது.. தஞ்சை பிரகாஷின்,  கள்ளம் அக்காலத்தில் தஞ்சையில் குடியேற்ற ப்பட்ட மராட்டிய, கொங்கணி பெண்களின் நிலையை கோடிட்டு,  தஞ்சை கலைஞர்களின் cut glass painting ல் மையம் கொண்டு சேரியில் அதைச் சேர்த்து அப்பெண்களையும் தன்னுடன் இணையாமல் இணைத்துக் கொண்ட ஓர் கலைஞனின் வாழ்வைச் சித்தரிக்கிறது..

 எழுத்தாளத்தந்தை தவிர மற்ற அனைவருமே தம் தொழிலை வாரிசுகள் திறம்பட செய்ய விரும்புகிறார்கள்,.. ஆனால் கலைத்தொழிலாக மாறி ப்ரதி எடுக்கப்படும் போது சுயத்தை இழந்து விடுகிறது, சுயத்தை இழந்த கலை அதன் உயிரோட்டத்தை இழந்து விடுகிறது, எந்த கலையையும் காதலையும் எல்லை வகுத்து செய்யச் சொல்ல முடியாது...இன்னின்னாருக்கு.... இன்னின்னாருக்குள் என்று வகைப்படுத்தப்பட்டது வரையறுக்கப்பட்டது எவ்வளவு அபத்தம்,.. மனிதனின் ஒட்டு மொத்த சுயநலத்தின் வெளிப்பாடல்லவா..

இந்தந்த சாதிக்குள், மதத்துக்குள் எனும் போது காதலாய் கசிந்து கனிவு தரும் வாழ்வேது அவ்விடம்,  கடமை மட்டுமே ஆற்றிக்கொண்டு ( ஆட்டிக்கொண்டு) மீதமுள்ள ஒரு நிமிடத்தை கடத்தலே அரிதெனில், வாழ்நாள் முழுமைக்குமான பல நாட்களை வருடங்களை கழித்தல் எங்கணம்.. பகிர்தலில்லா வாழ்வை எவ்வளவு வருடங்கள் கடத்த இயலும், மாறிமாறி காதுகுத்தும் கல்யாணமும் பகட்டுக்காய் நடத்திக்கொள்ளப்படும் விஷயங்களும் நாடகங்களின்றி வேறென்ன...

இசையை, ஓவியத்தை,  விளையாட்டை,  இப்பிரபஞ்சம் தன்னிடம் கொண்டுள்ள பேரழகை,  பறவையை, மரங்களை, கடலை, வானத்தை, மழையை, ஆற்றை, அருவியை, காட்டை எதையும் காதலில் பகிராமல் பணமெண்ணிக்கொண்டிருப்பதையும்,  சொத்து சேர்ப்பதுவுமான சக துணையுடன் பகிர்தலில்லா வாழ்வு எவ்வாறான அபத்தம்,, இதற்காக போலியாய் உருவாக்கப்பட்ட சடங்குகளூம் சம்பிரதாயமும் எத்தனை...தடவித் தடவியே வாழ்வு நடத்த முடியாது, தடவுதல் மறத்துப்போகுமோர் நாள்,  அதில்லாமலும் ஒவ்வோர் நாளும் வாழ ஒவ்வோர் நிமிடமும் வாழ இயற்கையை பிரபஞ்சத்தை அதிலடங்கிய எண்ணற்ற அதிசயங்களை காதலில் பகிர்தலே உண்மைவாழ்வு...

புத்தன் அனைத்துமிருந்தும்,  அனைத்தும் துறந்து ஓடியது எதனால்,... ஏதோவொன்றாய் கடந்து செல்லும் வாழ்வதனை,  கானுருவதும்,  ரசிப்பதும் பகிர்தலுமாய் கொண்டாடுங்கள்,  பஞ்ச பூதங்கள் இப் பிரபஞ்சத்தை வழிநடத்துகிறது, அவை யாருடைய எதனுடைய கட்டுப்பாட்டிலும் இல்லை...

Saturday, August 19, 2017

                        பிடித்தது...

என்னை அடிக்கடி தொலைத்துவிட்டு, புதிதாய் மீட்டெடுக்கப்பிடிக்கும்..   வெவ்வேறான இடங்கள், சூழல்கள் தேடிக்கொண்டிருக்கும்,மனது...         இசை பிடிக்கும், ஒளி பிடிக்கும்..     ஓவியம் பிடிக்கும்,                       பறவையின் ஓசை பிடிக்கும்,       மலையும், மரங்களும் அடர் வனங்களும், அதன் அனுமான்ஷ்யமும் என் இஷ்டம், கேள்விகளில்லாத,       நிபந்தனைகளற்ற அன்பு பிடிக்கும்..   சிட்டுக்குருவியாய் சிறகடிக்கப்பிடிக்கும், பட்டாம்பூச்சியாய் பறத்தல்  பிடிக்கும்,,,     எல்லைகளற்ற வானம் பிடிக்கும்                 ஏகாந்தமான பிரபஞ்சம் பிடிக்கும்,..             எனக்கே எனக்கான இந்த உலகம் பிடிக்கும்...                           இவையாவையும் நேசிக்கும்         உன்னை மிக மிகப் பிடிக்கும்....